ஆம்பூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டம் போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத பரிதாபம்


ஆம்பூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டம் போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுத பரிதாபம்
x
தினத்தந்தி 13 April 2019 11:00 PM GMT (Updated: 13 April 2019 4:37 PM GMT)

ஆம்பூர் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே உள்ள கோவிந்தாபுரம், எட்டியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவரது மகள் ரேணுகா (வயது 21). தாய், தந்தை இல்லாததால் ‘ஷூ’ கம்பெனியில் வேலை பார்த்து தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தணிகாசலம் மகன் ஜானகிராமன் (25), டிரைவர். இருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜானகிராமன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேணுகாவை தனது வீட்டிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது வீட்டிற்கு வரவழைத்து காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானார்.

இதனை அறிந்த ரேணுகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலனிடம் வற்புறுத்தினார். ஆனால் ஜானகிராமன், தனது தாய், தங்கை மற்றும் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த ரேணுகா தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களும் ஜானகிராமனை சந்தித்து ரேணுகாவை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதால் ரேணுகா ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த மாதம் புகார் அளித்தார். ஆனால் மகளிர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ரேணுகா, மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் பற்றி கேட்கும் போதெல்லாம் சாக்கு போக்கு சொல்லி திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஒரு கட்டத்தில் ரேணுகா எனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 11-ந் தேதி ஜானகிராமன், அவரது தாய் ஜோதி, தங்கை உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஜானகிராமனை பிடித்து விசாரிக்கவில்லை.

இதுகுறித்து ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் மகளிர் போலீஸ் நிலையம் சென்று கேட்ட போது நாங்கள் வழக்குப்பதிவு செய்து விட்டோம், நீங்கள் கோர்ட்டில் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். மேலும் ஜானகிராமன் தன்னை கைது செய்யாமல் இருக்க கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரேணுகா புகார் கொடுத்து ஒரு மாதத்தை கடந்தும், மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்புக்கு வழக்குப்பதிவு செய்ததை அறிந்து ஆவேசம் அடைந்து நேற்று காலை தனது உறவினர்களுடன் காதலன் ஜானகிராமன் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் அவரது தங்கை மட்டும் இருந்தார். ரேணுகா மற்றும் அவரது உறவினர்கள் வருவதை அறிந்த அந்த பெண் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார்.

அதைத்தொடர்ந்து ரேணுகா தனது காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக உறவினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் அங்கு வந்து ரேணுகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேணுகா, கர்ப்பிணியாக இருக்கும் என்னை காதலனுடன் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறி போலீசாரின் காலில் விழுந்து கதறி, கதறி அழுதார். உடனே போலீசார் இப்படி செய்யக்கூடாது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அப்போது வீட்டிற்கு வந்த ஜானகிராமனின் தங்கையிடம் விசாரணை நடத்தி, வீட்டில் ஜானகிராமனை தேடி பார்த்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு, ஜானகிராமனின் தங்கையை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ரேணுகாவை, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டை சந்திக்கும்படி போலீசார் கூறினர். அதைத்தொடர்ந்து அவர், ஆம்பூர் வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தத்தை சந்தித்து புகார் தெரிவித்து அவருடைய காலில் விழுந்து கதறினார்.

அப்போது அவர் புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டார்.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story