கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு
கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற 3-ம் கட்ட பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையே தேர்தல் நடைமுறைகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 372 பேருக்கு ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது.
இதே போல நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 360 பேருக்கு சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியிலும், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 324 பேருக்கு திருவட்டார் எக்ஸ்.எல்.குளோபல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 325 பேருக்கு மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 322 பேருக்கு கருங்கல் பெத்லகேம் மேல்நிலைப்பள்ளியிலும் மண்டல அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகர்கோவில் அல்போன்சா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-
தேர்தல் அன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தான் ஆணையர்கள். இவர்கள் வருகிற 18-ந் தேதி காலை 6 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை உடனடியாக நுண் பார்வையாளர்களிடமோ அல்லது மண்டல அலுவலர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை சரியாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்தும், வி.வி.பேட் கருவியின் செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் விதிகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “குமரி மாவட்டத்தில் 1694 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 8552 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படும். இதில் 71 வாக்குசாவடிகளுக்கு பாதுகாப்பிற்காக துணை ராணுவ வீரர்கள் வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்தல் பணியாற்றுகின்றனர்“ என்றார்.
இந்த பயிற்சி வகுப்பில் நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story