வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தொழிற்சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் கிருபாகரன் கூறினார்.
நாகர்கோவில்,
அகில இந்திய வருங்கால வைப்புநிதி தொழிற்சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் கிருபாகரன் நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நாகர்கோவில் மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலக வளாகத்தில் நடந்த தொழிற்சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நாடு முழுவதும் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் பி, சி, டி. நிலையில் உள்ள அலுவலர்களின் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் இருக்கிறது. பி, சி, டி நிலைகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், கிளர்க்குகள் ஆகியோர் இருப்பார்கள். தமிழகத்தில் மட்டும் 390 கிளர்க் காலிப்பணியிடங்கள் உள்ளது. நாடு முழுவதும் 5500 காலிப்பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் சூப்பர்வைசர் காலிப்பணியிடங்கள் 220 உள்ளது. நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணி தொய்வு ஏற்படுகிறது. துரித சேவை செய்ய முடியாத நிலை வருங்கால வைப்புநிதி அலுவலகங்களில் உள்ளது. மேலும் கிளர்க்குகள், சூப்பர்வைசர்களுக்கு பதவி உயர்வு இல்லாமல் இருக்கிறது.
மண்டல ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் அனைத்து இடங்களிலும் போதுமான அளவு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பி, சி, டி நிலை அலுவலர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. டெல்லியில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கை வைக்கப்படும். நாகர்கோவில் மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நாகர்கோவில் மண்டல கிளைச் செயலாளர் அமானுல்லாகான், செயல் தலைவர் முத்துக்குமரன், துணை தலைவர் சரவணக்குமார், இணை செயலாளர் ஏழுமலை, அமைப்பு செயலாளர் பாலமுருகன், கோவை மண்டல தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story