குமரியில் கமல்ஹாசன்-சரத்குமார் இன்று தேர்தல் பிரசாரம் நடிகை குஷ்புவும் வாக்கு சேகரிக்கிறார்


குமரியில் கமல்ஹாசன்-சரத்குமார் இன்று தேர்தல் பிரசாரம் நடிகை குஷ்புவும் வாக்கு சேகரிக்கிறார்
x
தினத்தந்தி 13 April 2019 9:45 PM GMT (Updated: 13 April 2019 6:14 PM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ச.ம.க. தலைவர் சரத்குமார் மற்றும் குஷ்பு ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

நாகர்கோவில், 

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு வேட்பாளர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் எபனேஷருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். அதன் பிறகு நாகராஜா கோவில் திடலில் மாலை 6 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதே போல பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ச.ம.க. தலைவர் சரத்குமாரும் இன்று குமரி மாவட்டம் வருகிறார்.

அவர் காலை 9.30 மணிக்கு குலசேகரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத் தொடர்ந்து களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று குமரி மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதாவது மாலை 4 மணிக்கு கொட்டாரத்தில் பிரசாரத்தை தொடங்கும் அவர் சுசீந்திரம், ராமன்புதூர், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, ஊரம்பு, களியக்காவிளை, குழித்துறை, குலசேகரம், வேர்கிளம்பி, தக்கலை ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

Next Story