ஆட்டையாம்பட்டியில் இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆட்டையாம்பட்டியில் வீடு புகுந்து இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆட்டையாம்பட்டி,
சேலம் அருகே ஆட்டையாம்பட்டி உழவர்சந்தை எதிர்புறம் உள்ள மாதேஸ்வரன் கோவில் கரட்டில் வசித்து வந்தவர் அறிவு என்கிற அறிவழகன் (வயது 35). இவர் காளிப்பட்டி சந்தைப்பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பார்வதி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பார்வதி தனது மகன்களுடன், ஆட்டையாம்பட்டியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் இரவு அறிவழகன் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் ஒரு மர்ம கும்பல் புகுந்தது. திடீரென்று அவர்கள் அரிவாளால் அறிவழகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இந்த நிலையில், காலையில் வீட்டுக்கு வந்த பார்வதி, தனது கணவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், அறிவழகன் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகம் வலுத்து உள்ளது என்று கூறினார்கள்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆட்டையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story