மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்


மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 April 2019 10:45 PM GMT (Updated: 13 April 2019 7:05 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் தடையில்லாமல் வாக்கு அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் வாக்குப்பதிவு நாளன்று அடிப்படை வசதிகள் மேற்கொள்வது மற்றும் வன விலங்குகளால் தடையில்லாத வகையில் வாக்கு அளிக்க வனத்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தகவல் தொடர்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகளான தங்கும் வசதி, குடிநீர் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி போன்றவற்றை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தல், வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களை அதிக நேரம் நிற்க வைக்காமல் அருகில் உள்ள பள்ளி காலி அறைகளில் அமர வைக்க வேண்டும். மேலும் தேசிய மாணவர் படை மாணவர்கள், என்.சி.சி. மாணவர்கள் மூலம் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வழிகாட்டுதல், சிரமமின்றி வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை கண்காணிக்க வேண்டும்.

மேலும் கண்காணிப்பு அலுவலர்கள் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினமான வருகிற 17-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கவும், வாக்குப்பதிவு நாளான 18-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிட தேவையான முன்னேற்பாடு பணிகளை கண்காணிக்க வேண்டும். மலை கிராம பகுதிகளான அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், பெட்ட முகிளாலம், கெலமங்கலம், உரிகம், தக்கட்டி, ஜவளகிரி, மஞ்சுகொண்டப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள கொண்டு செல்லும் போதும், வாக்குப்பதிவு முடிவுற்ற பின்பும் பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு வனத்துறை அலுவலர்கள் ஒத்துழைப்போடு, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் மலை கிராமங்களில் தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்களை வாக்களிக்க வசதியாக தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வாக்குப்பதிவு அன்று அவ்வப்போது தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கும் வகையில் சிக்னல் கிடைக்க கூடிய இடங்களிலிருந்து தகவல்களை தெரிவிக்க வேண்டும். எனவே, தேர்தல் நல்ல முறையில் நடைபெற அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story