தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது


தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 April 2019 4:15 AM IST (Updated: 14 April 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 150 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சஞ்சிவ்குமார் பெஸ்ரா மற்றும் நுண்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மலர்விழி பேசியதாவது:-

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அதை மிக கவனமாக நுண்பார்வைாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

இதேபோல் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் பிற செயல்பாடுகளை துல்லியமான கண்காணித்து பொதுத் தேர்தல் பார்வையாளருக்கு உரிய அறிக்கையை அளிக்க வேண்டும். தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 150 மத்திய அரசு பணியாளர்களுக்கும் தபால் வாக்குக்கான படிவங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் எந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களில் வெப்பம் மற்றும் நேரடியாக ஒளி படும் இடங்களில் வைக்காமல் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

Next Story