ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு எழுத தட்கலில் விண்ணப்பிக்கலாம் முதன்மை கல்வி அதிகாரி தகவல்
ஜூன் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்காதவர்கள் தட்கல் திட்டத்தின்கீழ் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சிறப்பு துணை தேர்வு எழுத ஏப்ரல் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான நாட்களில் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஜூன் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு சிறப்பு துணை தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத்துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையத்திற்கு வருகிற 15 மற்றும் 16-ந் தேதி ஆகிய இரு தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுத் கட்டணத் தொகை பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ. 50-ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதி சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வு கட்டணம் விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும்
அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துகொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story