ஓமலூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் சாவு
ஓமலூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளி மான் செத்தது.
ஓமலூர்,
ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட காஞ்சேரி, கருவாட்டு பாறை, பெலாகள்ளி கோம்பை, பொனகாடு, லோக்கூர், கணவாய்புதூர் காப்புக்காடு போன்ற வனப்பகுதிகளில் மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இங்கு தற்போது கடும் வறட்சி நிலவுவதால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள்ளும், விவசாய தோட்டத்துக்கும் வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை நாய்கள் கடித்து பரிதாபமாக இறக்கும் நிலை தொடர்கிறது.
இந்த நிலையில் நேற்று காலை கருவாட்டுபாறை காப்பு காட்டில் இருந்து டேனிஷ்பேட்டை வத்தியூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் தேடி ஒரு புள்ளி மான் வந்தது. மானை பார்த்ததும் நாய்கள் துரத்தின. பின்னர் நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமானுக்கு படுகாயம் ஏற்பட்டது. நாய்களிடம் இருந்து பொதுமக்கள் மானை மீட்டனர்.
பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் டேனிஷ்பேட்டை வன அலுவலர் பரசுராமமூர்த்தி மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் மானை பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஆனால் அந்த மான் சிறிது நேரத்தில் பரிதாபமாக செத்தது. இதைத்தொடர்ந்து அதன் உடலை பரிசோதனை செய்து, வனத்துறையினர் புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், நாய்கள் கடித்து குதறியதில் இறந்தது 4 வயதுடைய ஆண் மான் என்று தெரிவித்தனர்.
இதேபோல் பொம்மியம்பட்டி கோம்பை காப்பு காட்டில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 3 வயதுள்ள பெண் புள்ளிமான் பள்ளத்தில் விழுந்தது. இதனால் அதன் கால் முறிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த மானை மீட்டு சிகிச்சை அளித்து பொம்மியம்பட்டி கோம்பை காப்பு காட்டில் மீண்டும் விட்டனர்.
தண்ணீர் தேடி அடிக்கடி மான்கள் ஊருக்குள் வருவதால், டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் தண்ணீரை ஊற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story