திருக்கோவிலூர் பகுதியில் வாகன சோதனை: தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
திருக்கோவிலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரிடம் ரூ.28½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஞானநந்தா தபோவனம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து அதில் வந்த பயணிகளின் உடைமைகளை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது ஒருவர் எடுத்து வந்திருந்த மஞ்சள் பையை வாங்கி அதிகாரிகள் பார்த்தனர். அதில் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 610 ரூபாய் இருந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்த போது, பெங்களுரு கவுன்பள்ளி கிராமத்தை சேர்ந்த அம்ஜித்(வயது 30) என்பதும், அவர் மணிலா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் பண்ருட்டியில் மணிலா வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை திருக்கோவிலூர் சப்கலெக்டர் சாருஸ்ரீயிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அப்போது தாசில்தார் சிவசங்கரன் உடன் இருந்தார்.
மணலூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே ரிஷிவந்தியம் தொகுதி பறக்கும் படை அதிகாரி சாமிதுரை தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த பிள்ளையார்பாளையம் தி.மு.க. பிரமுகர் மாணிக்கம் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.55 ஆயிரம், பிள்ளையார் பாளையம் வெங்கடேஷ் என்பவர் கொண்டு வந்த ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.