ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவச பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கம்
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவசமாக பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில்கள் வந்து செல்கின்றன. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தவும்,ரெயில்வே நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் சிரமம் இன்றி நடந்து செல்லவும் வசதி ஏற்படுத்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே நிலைய பகுதியை சுற்றிருந்த கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதுடன் ரெயில் தண்டவாள பாதைகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருப்பு கட்டிடமும் புதிதாக கட்டும் பணிகளும் நடைபெற்று வருவதுடன் ரெயில் நிலைய முகப்பு பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அலங்கார மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு பயணிகள் நடந்துசெல்லும் வகையில் ரெயில் நிலைய பாதையில் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராமேசுவரத்திற்கு ரெயில்களில் வரும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து வெளியே வாசலுக்கு சுலபமாக வரும் வகையிலும் அதுபோல் வெளிவாசல் பகுதியில் இருந்து உள்ளே வரவும் இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளன.அதற்காக ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு 3 பேட்டரி கார்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:– ராமேசுவரம் ரெயில் நிலையத்திற்கு வரும் மற்றும் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வசதிக்காக இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளன.அதற்காக 3 பேட்டரி கார்கள் புதிதாக வாங்கப்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் 3 பேட்டரி கார்களும் பயணிகளின் வசதிக்காக விரைவில் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.