தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 13 April 2019 11:15 PM GMT (Updated: 13 April 2019 8:33 PM GMT)

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா? என திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திருச்சி, 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மோடியின் ஆட்சிக்கு விடை கொடுக்கிற தேர்தலாக அமைய வேண்டும். மோடிக்கு எடுபிடியாக, பா.ஜ.க. ஆட்சிக்கு சேவகனாக செயல்படும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு நாம் விடை கொடுக்க கூடியதாகும். இந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்காக தான் உங்களை தேடி, நாடி நான் வந்திருக்கிறேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களை தேடி வருபவர்கள் நாங்கள் அல்ல.

தீரர்கள் கூட்டமாகவும், தி.மு.க.வின் எக்கு கோட்டையாகவும், கழகம் அரசியல் களத்தில் காலூன்ற காரணமாகவும் இருந்த இந்த திருச்சியில் நடைபெற உள்ள தேர்தலில் நீங்கள் ஆதரவு தர வேண்டும். திருச்சியை பொறுத்தவரைக்கும் போட்டிக்கு தேதி குறித்துவிட்டால் போதும், அடுத்து வெற்றி விழாவுக்கு தான் தேதி குறிக்கப்படும். அந்த அளவுக்கு தி.மு.க. கோட்டையாக திருச்சி உள்ளது. உங்களுக்கு (திருநாவுக்கரசர்) நிச்சயமாக வெற்றியை தேடி தருவோம் என தெரிவிக்கிறேன்.

டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என மாற்ற தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தியதற்காக கலைஞர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டது திருச்சி மத்திய சிறை தான். கலைஞர் அடிக்கடி சொல்வது உண்டு. தான் பிறந்த ஊர் திருவாரூர் என்றாலும், வளர்ந்தது திருச்சி தான் என கலைஞர் கூறுவார்.

கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் திருச்சி தான். கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் எனது பிரசார பயணத்தை கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 32 தொகுதிகளில் பயணத்தை முடித்துவிட்டு திருச்சி வந்துள்ளேன். கலைஞர் இல்லாமல் நடைபெறுகிற முதல் தேர்தல் இது. கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக திருச்சிக்கு வந்து அவர் உங்களிடத்தில் வாக்கு கேட்டிருப்பார். இயற்கை சில நேரங்களில் நம்மை ஏமாற்றிவிடுகிறது. அந்த ஏமாற்றத்தை கடந்த ஆகஸ்டு மாதம் நாம் பெற்றோம். அவர் உருவம் நம்மிடத்தில் இல்லையென்றாலும் அவர் நம் உள்ளத்திலும், உடலிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் இல்லாத இந்த நேரத்தில் அவர் மகனாக உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே தி.மு.க.வின் அடிப்படை கொள்கை. தி.மு.க.வின் எண்ணங்களை எல்லாம் பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள். அண்ணா, கலைஞர் இருந்திருந்தால் அந்த தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு ராகுல் காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்கள்.

தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு பல ஒற்றுமை உள்ளது. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஹீரோவாகவும், காங்கிரஸ் கட்சி சூப்பர் ஹீரோவாகவும் உள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோவாக உள்ளது. எதிர் அணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சியினரின் தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. சொல்வதை ஏற்கின்றனரா? நீட் தேர்வு ரத்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ள தயாரா?. அ.தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அளவில் உருவானது அல்ல. அது கொள்ளை கூட்டணி.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கலைஞர் ஆட்சியில் இருந்த போதும், மத்தியில் அங்கம் வகித்த போதும் செய்த சாதனைகளை பட்டியலிட்டு நாங்கள் சொல்கிறோம். நீங்கள் (அ.தி.மு.க.) ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்ன சாதனைகள் செய்துள்ளர்கள்? என கேட்கிறேன். தி.மு.க. சாதனைகளை பட்டியல் போடுவதை போல உங்களால் பட்டியல் போட முடியுமா?. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அந்த 37 எம்.பி.க்கள் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? இதனை முதல்-அமைச்சர் சொல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் பிரச்சினைகளை பற்றி சுட்டிகாட்டியுள்ளனரா? தமிழகத்திற்கு உரிய நிதியை பெற்றுத்தந்துள்ளார்களா? காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்தார்களா?. 37 எம்.பி.க்களால் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நன்மை என்ன? சாதனைகளை பட்டியல் போட முடியுமா?.

கரூர், காஞ்சீபுரம், பெரம்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய செல்லும்போது அவர்களை மக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். இது இந்த ஆட்சியை நடத்துகிறவர்கள் மீது மக்களுக்கு எந்த அளவுக்கு கோபம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. தி.மு.க.வினர் பிரியாணி கடை, தேங்காய் கடையில் காசு கொடுக்காமல் சென்று விட்டார்கள் என பேசி வருகிறார். இது எல்லாம் முதல்- அமைச்சர் பேசக்கூடியதா?. அ.தி.மு.க. வில் 4-ம் கட்ட பேச்சாளர்களை போல தரம் குறைந்து கேவலமாக பேசி வருகிறார். ஸ்டாலினின் காது ஜவ்வு கிழிந்து விடும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும். தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் உருவான பிறகு உங்கள் (எடப்பாடி பழனிசாமி) வாழ்க்கையே கிழியப் போகிறது.

வெளிநாடு வாழ் பிரதமர் மோடி தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார். ரபேல் ஊழல் விவகாரத்தில் மோடியின் முகத்தில் உச்சநீதிமன்றம் கரியை பூசியுள்ளது. ராகுல் காந்தி மன்னர் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏழைகளின் நிலை அறிந்து வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் அறிவித்துள்ளார். ஏழைத்தாயின் மகன் என கூறும் மோடி, கார்ப்பரேட்களுக்கு உதவி செய்யக்கூடியவராக உள்ளார். நீங்கள் (மோடி) காவலாளி அல்ல, களவாணி. கடந்த 2014-ம் ஆண்டு மக்களை சந்தித்த மோடி அறிவித்ததை எல்லாம் நிறைவேற்றினாரா?. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் ஒவ்வொருவருக்கும் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் செய்யவில்லை.

இந்த ஆட்சியை பார்த்து எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து 3 கேள்விகளை இந்த தேர்தல் பிரசாரத்தில் கேட்டு வருகிறேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. இருப்பினும் மீண்டும் கேட்கிறேன். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம், கோடநாடு விவகாரம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகியவற்றிற்கு எந்த பதிலும், மறுப்பும், விளக்கமும் இல்லை. என்ன உண்மை என்பதையும் தெரிவிக்கவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறபோது மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அப்போது நாங்கள் வந்து அமரும்போது இந்த உண்மைகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி குற்றவாளிகளை சிறையில் அடைப்பதே முதல் வேலை.

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 6 அடி இடம் தர மறுத்த கொள்ளை கூட்டம் இந்த ஆட்சி. 5 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர், எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்தவர், ஜனாதிபதி, பிரதமரை அடையாளம் காட்டியவர் கலைஞர். அவரது உறுதி மொழியை நிறைவேற்ற நானே நேரடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று அவரது கையை பிடித்து கேட்டேன். மறுத்தார்கள், அதற்கு பிறகு தான் நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்றோம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும், உருவாக்கி தருவோம் என கலைஞருக்கு உறுதி அளித்திருக்கிறேன். அதற்கு மத்தியில் இருக்கிற மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story