காலணிகளை சுத்தம் செய்து பிரசாரம்: கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி


காலணிகளை சுத்தம் செய்து பிரசாரம்: கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 4:00 AM IST (Updated: 14 April 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் காலணிகளை சுத்தம் செய்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டு கைதான பெண்ணை விடுதலை செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்போம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.

திருச்சி,

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அங்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முன்பு கடந்த 11-ந் தேதி நர்மதா என்ற பெண், கோவிலுக்கு வந்த பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக நூதன பிரசாரம் செய்தார். இது அவரவர் உரிமை. அவர் எந்த இடத்திலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் அவரை கைது செய்து உடனடியாக சிறையில் அடைத்து விட்டார்கள். திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷுக்களுக்கு பாலீஷ் போட்டு பிரசாரம் செய்கிறார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

தமிழகத்தில் பல இடங்களில் கோவில் முன்பும், மசூதிகள் முன்பும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் நர்மதா கைது செய்யப்பட்டது எந்த விதத்திலும் நியாயமில்லை. காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த நிர்ப்பந்தத்திற்கு காவல்துறை பணிய வேண்டிய அவசியமில்லை. எனவே, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் ஆன்லைன் மூலம் புகார் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் பரமானந்தம் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story