புதுவையில் பயங்கரம்; மினிவேன் டிரைவர் அடித்துக் கொலை, சாராயக்கடை சூறை


புதுவையில் பயங்கரம்; மினிவேன் டிரைவர் அடித்துக் கொலை, சாராயக்கடை சூறை
x
தினத்தந்தி 14 April 2019 4:00 AM IST (Updated: 14 April 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சாராயக் கடையில் நடந்த தகராறில் மினிவேன் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாராயக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

சேதராப்பட்டு,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான இடையஞ்சாவடியை சேர்ந்தவர் கணபதி (வயது 35). மினிவேன் டிரைவர். இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர். ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சாராயக் கடையில் அடிக்கடி சாராயம் குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் அந்த கடைக்கு கணபதி சாராயம் குடிக்க சென்றார்.

சாராயக் கடையில் சாராயம் குடித்த அவருக்கும் அங்கு சால்னா கடை (நொறுக்கு தீனி விற்கும் கடை) வைத்திருக்கும் மூர்த்தி (45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில், கடையில் இருந்த சரக்குகளை கணபதி தட்டிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி மற்றும் சாராயக்கடையில் இருந்தவர்கள் கணபதியை சரமாரியாக தாக்கினர். இந்த மோதலை தொடர்ந்து அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்தநிலையில் சரமாரியாக தாக்கப்பட்ட கணபதி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இரவோடு இரவாக அவர்கள் திரண்டு சென்று சாராயக்கடைக்கு சென்றனர். அங்கிருந்த சாராய பாட்டில்கள், நாற்காலி உள்பட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று, பொதுமக்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கிடையில் கணபதியை அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சஞ்சீவிநகர் - ஆலங்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோரிமேடு மற்றும் கோட்டக்குப்பம் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள், கணபதியை கொலை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கொலை தொடர்பாக கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிர விசாரணை நடத்தி தேடி வருகிறார்.

Next Story