கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியலூர்,
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் சன்னதியில் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள், கொடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பின்னர் கொடி மரத்தின் அருகே ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வைக்கப்பட்டு, பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு சூரிய வாகனத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது. நேற்று தொடங்கிய இந்த திருவிழா வருகிற 22-ந் தேதி முடிவடைகிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியான சதுர்முக படத்தேர் வருகிற 17-ந் தேதியும், திருக்கல்யாணம் 19-ந் தேதியும், தேரோட்டம் 21-ந் தேதியும் ஏகாந்த சேவை 22-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பலூர், ஆத்தூர், சேலம், துறையூர், கடலூர் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி மற்றும் ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி ஆகியோர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story