மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 April 2019 10:30 PM GMT (Updated: 13 April 2019 9:41 PM GMT)

மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை, 

மணப்பாறை நகராட்சி 13, 14-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் காந்திநகர் பிரிவு அருகே காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்கள் பகுதியை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாகவும், உடனே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் கடும் வறட்சியால் நாங்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம் எனவும் கூறினர். இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி அதிகாரி மற்றும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story