வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல்: வாக்கு எண்ணும் மையம் தயார்படுத்தும் பணி தீவிரம்
வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடப்பதையொட்டி, வாக்கு எண்ணும் மையம் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது.
இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்பட 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது. இந்த 6 தொகுதிகளிலும் 1,660 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3,993 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,034 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதை உறுதி செய்யும் எந்திரமும்(வி.வி.பேட்) பயன்படுத்தப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் முன்பு, அவற்றில் வேட்பாளர் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட வேண்டும். அவை பொருத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன. 24 வேட்பாளர்கள் என்பதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மின்னணு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னமும், 2-வது எந்திரத்தில் எஞ்சியுள்ள 8 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னமும் இடம் பெற்றுள்ளது. 25-வது இடத்தில் ‘நோட்டா’ இடம் பெற்றுள்ளது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என நினைக்கும் வாக்காளர்களுக்காக நோட்டா இடம் பெற்றுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மட்டுமின்றி, கூடுதலாக சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்படுகிறது. தற்போது வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. எந்த வாக்குச்சாவடியிலாவது பிரச்சினை என தெரிந்தால், அதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 18-ந் தேதி மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே, வாக்கு எண்ணும் மையமான சாரநாதன் பொறியல் கல்லூரியில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு தரைத்தளம், முதல் தளம், 2-வது தளத்தில் வாக்குகள் எண்ணப்படுகிறது. பாதுகாப்புக்காக தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் ‘வெப்’ கேமராக்கள் பொருத்தும் பணி, வாக்கு எண்ணும் இடத்தில் இரும்பு கம்புகளால் ஆன வலை அடிக்கும் பணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் தரைத்தளத்தில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆன பந்தல் அமைக்கும்பணி நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 18-ந் தேதி மாலை முதல் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்படுவதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கலெக்டர் சிவராசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ந்தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story