மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 April 2019 11:00 PM GMT (Updated: 13 April 2019 10:47 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது என மாவட்ட கலெக்டர் ஆனந்த் வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர், 

நாகை தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் அட்டை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் நேமா, திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தல் பார்வையாளர் சந்திரகாந்த் டாங்கே, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஆனந்த் ஆகியோர் தபால் அட்டை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் கூறியதாவது:-

நாகை தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சக்கர நாற்காலி, வழிகாட்டி பலகை போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் 7,260 மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 909 மாற்றுத்திறனாளிகள் கண் பார்வையற்றவர்கள். இவர்கள் அனைவரும் 100 சதவீதம் கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க தவற கூடாது என்பதை வலியுறுத்தி தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி முறையில் எழுதப்பட்டுள்ள தபால் அட்டைகள் அனுப்பப்பட்டு உள்ளன.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து தபால் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தவற கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் உமாமகேஸ்வரி, பால்துரை, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, அஞ்சல் துறை திருவாரூர் உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் லெட்சுமி, திருவாரூர் அஞ்சலக அலுவலர் லெட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story