பாளையங்கோட்டையில் சிறப்பு முகாம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டு போட்டனர்


பாளையங்கோட்டையில் சிறப்பு முகாம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 14 April 2019 1:12 AM GMT (Updated: 14 April 2019 1:12 AM GMT)

பாளையங்கோட்டையில் நேற்று நடந்த சிறப்பு முகாமில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டுகளை போட்டனர்.

நெல்லை,

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் நேரடியாக தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட முடியாது. எனவே அவர்கள் தங்களது ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை நிறைவேற்ற தபால் ஓட்டு வழங்கப்படுகிறது. இந்த ஓட்டுகளை பெரும்பாலானோர் சரியான முறையில் பூர்த்தி செய்து தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதை தவிர்க்க தபால் ஓட்டுகளையும் 100 சதவீதம் நிறைவேற்றும் வகையில் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந்தேதி நடைபெற்ற 2-வது கட்ட பயிற்சி முகாமில் தபால் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடங்களில் பயிற்சி நடைபெற்றது. இதற்காக அங்கு தபால் ஓட்டு பெட்டிகளும் வைக்கப்பட்டன. அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுகளை பூர்த்தி செய்து, பெட்டியில் போட்டனர்.

இதேபோல் நெல்லை மாநகர போலீசாரும் ஒரே இடத்தில் தபால் ஓட்டுகளை போடுவதற்கு வசதியாக பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

நெல்லை மாநகர போலீஸ் துறையில் பணியாற்றும் 932 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தபால் ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்பட்டு இருந்தன. இதற்காக நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு பெட்டியும், தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. தபால் ஓட்டுகளை போலீசார் எடுத்து வந்து, அங்கு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்றனர். பின்னர் அதில் உள்ள வேட்பாளர்களில் தாங்கள் ஓட்டு போட விரும்பியவர் பெயரில், ‘டிக்’ செய்து உறையில் போட்டு மூடினர். பின்னர் தபால் ஓட்டுகளை அதற்குரிய பெட்டியில் போட்டனர்.

காலை 11 மணிக்குள் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஓட்டு போட்டனர். மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இதில் நெல்லை தொகுதியில் 751 போலீசாரும், தென்காசி தொகுதியில் 15 போலீசாரும் தபால் ஓட்டு போட்டு இருந்தனர். இந்த வாய்ப்பில் ஓட்டு போடாத போலீசார், பின்னர் தபால் ஓட்டுகளை பூர்த்தி செய்து, அதற்குரிய பெட்டியில் வருகிற மே மாதம் 23-ந்தேதிக்குள் சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷில்பா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை புறநகர் மாவட்ட போலீஸ் துறையில் பணிபுரியும் போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு போடும் போலீசாருக்கு பாளைங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு போடும் போலீசாருக்கு தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது.

Next Story