கத்தியை காட்டி மிரட்டி லாட்ஜ் உரிமையாளரிடம் ரூ.54 ஆயிரம் பறிப்பு 4 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டி லாட்ஜ் உரிமையாளரிடம் ரூ.54 ஆயிரம் பறிப்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 5:22 PM GMT)

வேலூர் தோட்டப்பாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி லாட்ஜ் உரிமையாளரிடம் ரூ.54 ஆயிரம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சேன்மாய் பாண்டே (வயது 35). இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள லாட்ஜை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி இரவில் மர்ம நபர்கள் சிலர் லாட்ஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சேன்மாய் பாண்டேவிடம் பேசினர். அப்போது அவர்கள், தங்களை ரவுடி மகா கூட்டாளிகள் என்று அறிமுகப்படுத்தி கொண்டு அப்பகுதியில் லாட்ஜ் நடத்துவதற்கு ரூ.5 லட்சம் தரும்படியும், இல்லையென்றால் தொடர்ந்து லாட்ஜை நடத்த முடியாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் 4 பேர் லாட்ஜிக்கு வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சேன்மாய் பாண்டே சட்டை பையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் என ரூ.50 ஆயிரத்தை எடுத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் லாட்ஜில் புகுந்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி விடுவதாக அவர்கள் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

மர்மநபர்களின் மிரட்டலுக்கு பயந்த சேன்மாய் பாண்டே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கவில்லை. இதனை மர்மநபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணினர். அதன்படி, மர்மநபர்கள் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு லாட்ஜிக்கு சென்று கத்தியை காட்டி சேன்மாய் பாண்டே வைத்திருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேன்மாய் பாண்டே இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

அதில், தோட்டப்பாளையத்தை சேர்ந்த அசோக் என்கிற தனராஜ் (25), ஆனந்த் (27), பிரசாந்த் (23), நாராயணன் என்கிற பார்த்திபன் (23) உள்பட அதே பகுதியை சேர்ந்த 10 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து அசோக், ஆனந்த், பிரசாந்த், நாராயணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 6 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story