தேர்தலையொட்டி துணை ராணுவ வீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார்


தேர்தலையொட்டி துணை ராணுவ வீரர்கள், போலீசார் கொடி அணிவகுப்பு கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 5:24 PM GMT)

நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலையொட்டி வேலூரில் துணை ராணுவ வீரர்கள், போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதனை கலெக்டர் ராமன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

வேலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களை கவர பரிசு மற்றும் பணம் வினியோகத்தை தடுக்க பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறும் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலீசாருடன் இணைந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நேற்று வேலூரில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ராமன் தலைமை தாங்கி, கொடி அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கொடி அணிவகுப்பு சைதாப்பேட்டை முருகர் கோவில் அருகே தொடங்கி, மெயின் பஜார், மண்டிவீதி, சுண்ணாம்புக்கார தெரு, பில்டர்பெட் ரோடு, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக சென்று பெரியார் பூங்கா அருகே நிறைவடைந்தது.

இதில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் துணை ராணுவ வீரர்கள், போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

Next Story