அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2019 11:15 PM GMT (Updated: 14 April 2019 7:10 PM GMT)

‘அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார். உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 100-க்கு 21 பேர் உயர் கல்வி கற்கும் நிலை இருந்தது. இன்று 46.8 ஆக அது உயர்ந்துள்ளது. கல்விக் காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதிக நிதியை ஒதுக்கினார். மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரி களை கொண்டு வந்தார்.

அதே போல வேளாண்மைத் துறைக்காக அதிக நிதியை ஜெயலலிதா ஒதுக்கினார். விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை. சுகாதாரத்துறை மூலமாக 2 கைகளை இழந்த ஒருவருக்கு 2 கைகள் ஆபரேஷன் மூலமாக பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சட்டம் -ஒழுங்கை சரியில்லை என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம் - ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் என பிரபல ஆங்கில நாளிதழ் விருது வழங்கி உள்ளது. அதை நான் பெற்று வந்துள்ளேன். எங்கள் ஆட்சியில் சட்டம் -ஒழுங்கை பற்றி பேசும் ஸ்டாலின், தற்போது மதுரையில் காலை யில் நடைபயிற்சி செல்கிறார். டிசர்ட் போட்டபடி சென்று ஓட்டு கேட்கிறார்.

அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவரால் மதுரை யில் நுழைய முடிந்ததா?. மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் நானும் எம்.எல்.ஏ. தான். 1974-ம் ஆண்டு சிலுவம் பாளையத்தில் கிளை செயலாளராக இருந்து பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சி யில் ஒன்றிய பொறுப்பிலும், அவர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனேன். பிறகு எம்.பி., கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி, தலைமை நிலைய செயலாளர், அமைச்சர் என்று இப்படி படிப்படியாக முதல்-அமைச்சராக உயர்ந்தவன் தான் நான். மு.க.ஸ்டாலினின் தந்தை தி.மு.க. தலைவர். இப்போது அவர் தி.மு.க. தலைவர். நான் உழைத்து கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவன்.

ஆனால் மு.க.ஸ்டாலின் எப்போதும் என்னை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். தூங்கும் போது கூட அவருக்கு முதல்- அமைச்சர் கனவில் இருப்பார். உங்களிடம் நல்ல எண்ணம் இருந்தால் உங்களை தேடி அந்த பதவி வரும். அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்.

அவரது கட்சியின் முன் னாள் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க.வினர் கைதாகி உள்ளனர்.

2ஜி வழக்கில் விசாரணை நடந்த நேரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமாக இறந்தார். இன்று அவரது மனைவி ஜனாதிபதியிடம், தனது கணவர், மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். சாதிக் பாட்சாவின் மனைவி தமிழக காவல் துறையில் புகார் அளித்தால் அது பற்றி விசாரணை நடத்தப்படும். அதே போல மு.க.ஸ்டாலினின் நண்பர் அண்ணாநகர் ரமேஷ் மர்மமாக இறந்தார். நாங்களும் மர்ம மரணம் அனைத்தையும் தோண்டி எடுத்து விசாரணை நடத்துவோம்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்த விவகாரத்தில் தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். கருணாநிதிக்கு சர்தார்வல்லபாய் படேல் சாலையில் ரூ.300 கோடி நிலத்தை தர முன் வந்த போது அதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றவர் மு.க.ஸ்டாலின். பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி அனுதாபத்தை பெற மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story