முன்னாள் கவுன்சிலர் அடித்துக்கொலை: வாலிபர்கள் 2 பேர் போலீசில் சரண் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்
ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதால் முன்னாள் கவுன்சிலரை அடித்துக்கொலை செய்ததாக போலீசில் சரண் அடைந்த வாலிபர்கள் 2 பேரில் ஒருவர் வாக்குமூலத்தில் கூறினார்.
பெருந்துறை,
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பள்ளக்கவுண்டன்பாளையம் அருகே உள்ள கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). முன்னாள் கவுன்சிலர். இவருக்கும் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் பனையம்பள்ளி பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 2 மாதங்களிலேயே விஜயாவுக்கும், கோவிந்தராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக 2 பேரும் பிரிந்தனர். தற்போது விஜயா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு பனையம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கள்ளியம்புதூரில் உள்ள காட்டுப்பகுதியில் யாரோ சிலரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த நிலையில் கோவிந்தராஜ் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை அடித்து கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜை அடித்துக்கொலை செய்ததாக நவீன்குமார் (22) மற்றும் தியாகராஜன் (20) ஆகியோர் நேற்று பெருந்துறை போலீசில் சரண் அடைந்தனர்.
சரண் அடைந்த தியாகராஜன் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:–
என்னுடைய சொந்த ஊர் விஜயமங்கலம் அருகே உள்ள மேக்கூர் பகுதி ஆகும். எனது நண்பரான மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மூலம் கூனம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் எனக்கு பழக்கம் ஆனார். இதைத்தொடர்ந்து அவரும் என்னுடைய நண்பராக இருந்து வந்தார். கடந்த 11–ந் தேதி நான் மற்றும் என்னுடைய நண்பர்களான சேரன் நகரை சேர்ந்த நவீன்குமார், சங்கரநாராயணன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருடன் கள்ளியம்புதூர் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றோம்.
அப்போது நாங்கள் 4 பேரும் குடிபோதையில் இருந்தோம். பின்னர் மீண்டும் மதுகுடிக்க வேண்டும் போல் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு, கள்ளியம்புதூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று, அனைவரும் மது அருந்தினோம்.
அப்போது கோவிந்தராஜ் திடீரென என்னை ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் முதலில் கோவிந்தராஜை தாக்கினேன். பின்னர் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்தனர்.
இதில் கோவிந்தராஜ் மயங்கி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து நாங்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டோம். ஆனால் அவர் நாங்கள் தாக்கியதால் இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் எங்களை போலீசார் தேடுவதை அறிந்ததை தொடர்ந்து நானும், எனது நண்பர் நவீன்குமாரும் போலீசில் சரண் அடைந்தோம்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் தியாகராஜன் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தியாகராஜன் மற்றும் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் கொடுமுடி மாஜிஸ்திரேட்டு குமாரவர்மன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக உள்ள சங்கரநாராயணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.