ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதியது: தாய்-மகள் உள்பட 3 பேர் பலி


ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதியது: தாய்-மகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 7:37 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதி நடந்த விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். தமிழ்ப்புத்தாண்டில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நடந்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் செருவாவிடுதி கடைவீதியில் வாடகை சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (வயது44). இவர்களுடைய மகள் மவுனிகா (22). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்து விட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின். விவசாயி. இவருடைய மகன் சஞ்சய்குமார் (10), செருவாவிடுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால் தேன்மொழி, அவருடைய மகள் மவுனிகா, சஞ்சய்குமார் ஆகிய 3 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் உள்ள விடங்கேஷ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மவுனிகா ஓட்டினார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான சரக்கு வேன் செருவாவிடுதியில் உள்ள ஒரு கடையில் மாட்டு தீவன மூட்டைகளை இறக்கி விட்டு அணவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது.

திருச்சிற்றம்பலம் அருகே ஆவணம் சாலையில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் வந்தபோது சரக்கு வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது சரக்கு வேன் எதிரே வந்த ஸ்கூட்டர் மீது மோதி விட்டு கரும்பு வயலுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் தேன்மொழியும், அவருடைய மகள் மவுனிகாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். படுகாயம் அடைந்த சஞ்சய்குமார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் குளிச்சங்காடு கைகாட்டு அருகே உள்ள எல்.என்.புரத்தை சேர்ந்த சந்திரன் (34) என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்ப்புத்தாண்டு நாளில் கோவிலுக்கு சென்று திரும்பிய தாய், மகள் மற்றும் சிறுவன் உள்பட 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story