திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி அண்ணன்- தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பலி


திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி அண்ணன்- தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 14 April 2019 11:30 PM GMT (Updated: 14 April 2019 7:41 PM GMT)

திருப்பூர் அருகே சலவை ஆலை கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சரி செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீரபாண்டி,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த மோனகாளிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற பெயரில் சாய, சலவை ஆலையை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்வர் உசேன் பார்புயா(வயது26), தில்வார் உசேன் பார்புயா (21) (இவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி), அன்வர் உசேன் (20) மற்றும் அபிதுர் ரகுமான் (20) உள்பட 18 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் திருப்பூர் கல்லாங்காடு கிருஷ்ணா நகர் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். அதன்படி நேற்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் அவர்களது அறைகளில் தங்கி இருந்தனர். இதற்கிடையில் இவர்கள் வேலை பார்க்கும் சலவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேமித்து வைக்கும் 3 தொட்டிகளில் ஒரு தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆலையில் உள்ள ஒவ்வொரு தொட்டியும் 12 அடி நீளமும், 10அடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்டது. ஒவ்வொரு தொட்டியிலும் உள்ளே இறங்குவதற்கு 1½ அடி அகலம், 1½ அடி நீளம் கொண்ட சிறிய நுழைவு வாயில் மட்டுமே (சிறிய துவாரம் போன்றவழி) உள்ளது. தொட்டிக்குள் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் இந்த நுழைவு வாயில் வழியாக உள்ளே இறங்கிதான் சுத்தம் செய்ய வேண்டும்.

இதில் அடைப்பு ஏற்பட்ட தொட்டியை சரி செய்வதற்காக விடுமுறையில் இருந்த தொழிலாளர்கள் 7 பேரை வேலைக்கு வரும்படி ஜெயக்குமார் அழைத்துள்ளார். அதன்படி தொட்டியில் உள்ள அடைப்பை சரி செய்ய தில்வார் உசேன் பார்புயா, அன்வர் உசேன் பார்புயா, மற்றொரு அன்வர் உசேன், மற்றும் அபிதுர் ரகுமான் உள்பட 7 பேர் சென்றுள்ள னர். அவர்களில் முதலில் தில்வார் உசேன் பார்புயா தொட்டியின் மூடியை திறந்து, அதில் ஏணியை வைத்து உள்ளே இறங்கி உள்ளார். 10 அடி ஆழம் கொண்ட தொட்டியில் 4 அடி உயரத்திற்கு சாயநீர் தேங்கி உள்ளது. தொட்டிக்குள் இறங்கிக்கொண்டிருக்கும்போதே தில்வார் உசேன் பார்புயா திடீரென்று விஷவாயு தாக்கி மயங்கி கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார்.

இதை தொட்டியின் நுழைவு வாயில் வழியாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்த அன்வர் உசேன்பார்புயா, மற்றொரு அன்வர் உசேன் மற்றும் அபிதுர் ரகுமான் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக தொட்டியின் உள்ளே இறங்கினார்கள். அவர்களும் விஷவாயு தாக்கி மயங்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

இதனால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர். இது குறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்தினருக்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று விஷவாயு தாக்கி மயங்கி கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் தில்வார் உசேன் பார்புயா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்வர் உசேன் பார்புயா, மற்றொரு அன்வர் உசேன் மற்றும் அபிதுர் ரகுமான் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் உடலையும் பிரேத பரிசோதனை அறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இவர்கள் 4 பேரின் உடலையும் பார்த்து, அவர்களுடன் வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் மற்றும் திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி மற்றும் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த கழிவுநீர் தொட்டியையும் ஆய்வு செய்தனர்.

சலவை ஆலையில் கழிவுநீர் தொட்டி அடைப்பை சரி செய்யும்போது விஷவாயு தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story