மாவட்ட செய்திகள்

திருவான்மியூரில் பெண் என்ஜினீயருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது + "||" + Thiruvanmiyur Female engineer The young men arrested in the knife

திருவான்மியூரில் பெண் என்ஜினீயருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

திருவான்மியூரில் பெண் என்ஜினீயருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
திருவான்மியூரில், பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு,

சென்னை திருவான்மியூர் மாளவிகா அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் காவ்யா(வயது 24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


நேற்று மாலை காவ்யா, தனது அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டியுள்ள சாலையில் ஒரு வாலிபருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவின் வயிறு, மார்பு, இடுப்பு பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த காவ்யாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், கத்தியுடன் நின்றிருந்த வாலிபரை மடக்கிப்பிடித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காவ்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் அவர், காஞ்சீபுரத்தை சேர்ந்த கவின்(24) என்பது தெரிந்தது. கவின், காவ்யா இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து உள்ளனர். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 1 மாதமாக காவ்யா, கவினுடன் பேசுவதை தவிர்த்து விட்டதாகவும், செல்போன் அழைப்பையும் ஏற்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து நேற்று மாலை காவ்யாவை நேரில் சந்தித்து கவின் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவின், காவ்யாவை கத்தியால் குத்தியது, அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கவினை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என கவினிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் காவ்யா கண் திறந்து பேசினால்தான் கவின் கூறுவது உண்மையா? அல்லது காவ்யாவை ஒருதலையாக காதலித்து அவருக்கு கவின் தொல்லை கொடுத்து வந்தாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.