குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 7:48 PM GMT)

பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கிருஷ்ணகிரி பகுதிகளில் குடிநீர் வழங்க கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் தின்னை, தண்டுகாரனஅள்ளி, பானாக்காடு ஆகிய கிராமங்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரமாக இந்த பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி காலிக் குடங்களுடன் தர்மபுரி-பாப்பாரப்பட்டி சாலையில் பெருமாள் கடை பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மாரண்டஅள்ளி அருகே உள்ள திண்டல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் திண்டல் கீழ் பட்டாளம்மன் கோவில் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி மேலூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நீர் ஏற்றும் மோட்டார் பழுதானதால் தண்ணீர் ஏற்ற முடியாமல் போனது.

இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அப்பகுதி மக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலர்களிடம் புகார் செய்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை கும்மனூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

3 மாதங்களாக மோட்டார் பழுதை நீக்கி தண்ணீர் ஏற்றாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் குடிநீர் இல்லாமலும், கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்க முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னவெங்கடேசன் கூறியதாவது:- மேலூரில் குடிநீர் இல்லாமல் இருப்பது குறித்து என்னிடம் புகார் ஏதும் வரவில்லை. அந்த மோட்டார் பழுதை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story