தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 8:02 PM GMT)

தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஒடிசா மாநில சிறப்பு ஆயுதப்படையினர் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் போலீசார்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். தஞ்சை சிவகங்கைபூங்காவில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

இந்த அணி வகுப்பு தெற்குவீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம், கீழவாசல், பழைய மீன்மார்க்கெட், அண்ணாசாலை, பழைய பஸ் நிலையம், காந்திசாலை வழியாக ரெயிலடியில் முடிவடைந்தது. இதில் ஒடிசா மாநில சிறப்பு ஆயுதப்படையின் 3 அணிகளை சேர்ந்த 450 பேர், உள்ளூர் போலீசார் என மொத்தம் 1,500 பேர் பங்கேற்றனர். மேலும் தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நிருபர்களிடம் கூறும்போது, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து துணை ராணுவ படையை சேர்ந்த 678 பேர் வந்துள்ளனர். தஞ்சையில் 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், 2–வது அடுக்கில் உள்ளூர் காவலர்களும், 3–வது அடுக்கில் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.


Next Story