புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்


புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 15 April 2019 4:45 AM IST (Updated: 15 April 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. மேலும், ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட பெருமையும் இந்த மாவட்டத்தையே சேரும். இதன் மூலம் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்பை போற்றும் விதமாக புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே புதுக்கோட்டை மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில், சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் உலோக சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு காளையின் சிலையை கடந்த மார்ச் மாதம் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த காளை சிலையின் ஒரு புறத்தில் உள்ள காதை மட்டும் மர்ம நபர்கள் உடைத்து எடுத்து சென்று விட்டனர். அந்த வழியாக சென்றவர்கள் காளை சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story