ராமேசுவரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் 2000–த்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ராமேசுவரம்,
தமிழகம் முழுவதும் பாக்ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை காலமானது வருகிற ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15–ந் தேதி முதல் ஜூன் மாதம் 14–ந் தேதி வரை 61 நாட்கள் மீன்கள் இனப் பெருக்க காலமாக உள்ளதாலும் இந்த சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதாலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடை காலம் ராமேசுவரத்தில் தொடங்கி உள்ளது. தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்டகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
தடை காலம் தொடங்கியதை தெர்டர்ந்து ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் இருந்து மீன்பிடி வலை,மடி பலகை,ஐஸ்பெட்டி உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை டிராக்டர்,மாட்டு வண்டிகள் மூலமாக வீடுகளுக்கு கொண்டுசெல்ல தொடங்கி உள்ளனர்.