ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை– பணம் திருட்டு


ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை– பணம் திருட்டு
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 8:10 PM GMT)

ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து வீடுகளில் நகை– பணம் திருடுபோய் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள களம்நகர் பகுதியை சேர்ந்த ரகுமத்துல்லா என்பவரின் மகன் சேக் செய்யது இப்ராகிம்(வயது 35). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் தம்பி மனைவிக்கு ராமநாதபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார்களாம். இதன்காரணமாக சேக் செய்யது இப்ராகிம் தனது மனைவி உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் இரவு தம்பி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இரவில் அங்கு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் தனது வீட்டிற்கு வந்தபோது திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரொக்கம் ரூ.24 ஆயிரத்து 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சேக் செய்யது இப்ராகிம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும், ராமநாதபுரம் அருகே உடைச்சியார்வலசை பகுதியில் 2 வீடுகளிலும் திருடுபோயிருப்பதாக கூறப்படுகிறது. திருடுபோன பொருட்களின் மதிப்பு தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த பின்னர்தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தங்களின் கைவரிசையை காட்டி சென்றுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்ததால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் ரோந்து பணியில் ஈடுபட முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடி உள்ளனர். மேலும், தற்போது தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு சென்றுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story