திருச்சியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: கூட்டுறவு சங்க தலைவரை கடப்பாரையால் தாக்கிய கும்பல்


திருச்சியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: கூட்டுறவு சங்க தலைவரை கடப்பாரையால் தாக்கிய கும்பல்
x
தினத்தந்தி 14 April 2019 11:15 PM GMT (Updated: 14 April 2019 8:12 PM GMT)

திருச்சியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டுறவு சங்க தலைவரை கடப்பாரையால் ஒரு கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக அ.ம.மு.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் கூட்டணிக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சி 38-வது வார்டு அ.தி.மு.க. வட்ட செயலாளரும், தென்றல் நகர் கூட்டுறவு சங்க தலைவருமான கந்தசாமி நேற்று காலை மகளிர் அணி நிர்வாகிகளுடன் சாத்தனூர் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு 8 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென கடப்பாரைகளுடன் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கந்தசாமியை கடப்பாரைகளால் சரமாரியாக தாக்கினார்கள். இதனால் கந்தசாமி வலியால் ‘அய்யோ, அம்மா’ என்று அலறினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. மகளிர் அணியினர் அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் கந்தசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவருடைய கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதைதொடர்ந்து படுகாயத்துடன் கிடந்த கந்தசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தென்றல்நகர் கூட்டுறவு சங்க தேர்தலின் போது, அ.தி.மு.க.- அ.ம.மு.க. கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி மீது அ.ம.மு.க.வினர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த தாக்குதல் பற்றி தகவல் அறிந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனியார் மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்க தலைவரை தாக்கியது தொடர்பாக சாத்தனூர் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. வட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பழனியாண்டி, எல்.ஐ.சி.காலனியை சேர்ந்த வெள்ளதுரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story