மாவட்ட செய்திகள்

பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: கரூரில் காங்கிரஸ் வேட்பாளர்- முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம் + "||" + Disappointment for campaigning: Congress candidate in Karur - former minister sit struggle

பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: கரூரில் காங்கிரஸ் வேட்பாளர்- முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம்

பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: கரூரில் காங்கிரஸ் வேட்பாளர்- முன்னாள் அமைச்சர் உள்ளிருப்பு போராட்டம்
பிரசாரத்திற்கு அனுமதி மறுத்ததாக கூறி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கரூர் நாடாளுமன்ற தொகுதியின் 42 வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்திற்கு செல்வதற்கு, தேர்தல் ஆணையத்தின் சுவிதா என்கிற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வேட்பாளர்கள் அனுமதி பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்களின் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே கோவை ரோட்டில் உள்ள, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை அலுவலகம் முன்பு நாளை பிரசாரத்தை நிறைவு செய்ய காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் இணையதளம் மூலம் பிரசார அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. எனினும் தேர்தல் அதிகாரி அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் இறுதி கட்ட பிரசாரம் செய்ய அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் நேற்று மதியம் 2 மணியளவில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், கரூர் சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வருவாய் கோட்டாட்சியருமான சரவணமூர்த்தியை சந்தித்து, பிரசார அனுமதியில் ஏற்பட்ட குளறுபடி பற்றி முறையிட்டனர்.

மேலும், தேர்தல் விதிப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடிக்க அனுமதி வழங்கியது எந்த விதத்தில் நியாயம்?. தேர்தல் ஆணையம் இதில் பாரபட்சம் காட்டுகிறது என குற்றம் சாட்டி, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

இதற்கிடையே பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, மாவட்ட தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் அங்கு வந்து அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த தி.மு.க.-காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. கரூர் ஆயுதப்படையில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை நடத்தும் அரங்கிற்குள் தங்களையும் அனுமதிக்குமாறு கூறி, கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள கதவுகளை இழுத்து மூடி போலீசார் பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாதுகாப்புக்காக கலவர தடுப்பு வாகனமான “வஜ்ரா“ முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பிரசார அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், அ.தி.மு.க.விற்கு பிரசார அனுமதி வாங்கியதற்கான முகாந்திரம் என்ன? என்பதை விளக்கி கூற வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியும் ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அறையில் வெளிப்புறத்தில் போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த்குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர். இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், பிரசாரத்தினை எவ்வித இடையூறுமின்றி முடித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்றுக்கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறுகையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். அதுவும் பிரசார நேரத்தினை ஆன்லைனில் மதியம் 1.49-1.49 என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆப்-லைனில் (எழுத்து வடிவ விண்ணப்பத்தில்) குறிப்பிடும்போது நேரத்தினை மதியம் 2-6 என குறிப்பிட்டு அனுமதி வாங்கியிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் பிரசாரம் செய்ய கேட்டு நாங்கள் முறைப்படி விண்ணப்பித்தும், எங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதன் காரணமாகவே அதிகாரிகளை சந்தித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று. தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவர்களது அனுமதியை ரத்து செய்தார். அவர்களுக்கு மதியம் 12-2 பிரசார அனுமதி மனோகரா கார்னரில் வழங்கப்பட்டிருக்கிறது. தோல்வி பயத்தில் தம்பிதுரை இது போன்ற சதியில் ஈடுபடுகிறார். மேலும் 45 கல்லூரிகள் குற்றச்சாட்டினை எடுத்துக்கூறிய எங்கள் மீது வழக்கு தொடுப்பதாக அவர் கூறுகிறார். அப்படி செய்தால் நாங்கள் கல்லூரி பட்டியலை தர தயாராக இருக்கிறோம், என்றார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் செந்தில்பாலாஜி கூறுகையில், நாளை இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். அதில் கரூர் மனோகரா கார்னர் ரவுன்டானா, தாந்தோன்றிமலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட 3 இடங்ளை தவிர மற்ற 12 இடங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இது குறித்து கேட்ட போது, அ.தி.மு.க. சார்பில் அந்த இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருப்பதாக கூறியது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் துணை போயிருக்கின்றனர். நாங்கள் தேர்தல் பார்வையாளரை அழைத்து ஆய்வு செய்தபோது தவறு நடந்தது கண்டறியப்பட்டது. இது விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரை கரூருக்கு மத்திய அரசிடம் இருந்து கொண்டு வந்த திட்டம் என்ன? என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் மத்திய அரசு எதுவும் செய்யல்லை என அவர் கூறிவிட்டு, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது ஏன்? இதன் காரணமாக எதிர்ப்பு அவருக்கு வலுக்கிறது. 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்து டெபாசிட் இழப்பது உறுதி. இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி வெற்றி ஜூன் முதல் வாரத்தில் ஸ்டாலின் முதல்-அமைச்சராவார், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்
தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
2. காமநாயக்கன்பாளையம் அருகே பரபரப்பு, விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - 10 பேர் கைது
காமநாயக்கன்பாளையம் அருகே விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி விட்டு நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
3. இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறை சூறையாடப்பட்டது - 250 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
4. வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம்: பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு
அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.