கருத்துக்கணிப்புகளின் படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை - ரங்கசாமி பேச்சு


கருத்துக்கணிப்புகளின் படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை - ரங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:31 PM GMT)

கருத்துக் கணிப்புகளின்படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை என தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளை (செவ்வாய்கிழமை) மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புதுவை எம்.பி. தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை காலாப்பட்டு தொகுதி முழுவதும் திறந்த வெளி வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து உழவர்கரை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு ரங்கசாமி பேசியதாவது:–

புதுவை மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை. புதிய திட்டங்கள், தேர்தல் அறிவிப்புகள் எதுவும் இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய இலவச அரிசி, துணி, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட எதையும் செயல்படுத்தவில்லை. நான் முதல்–அமைச்சராக இருந்த போது பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் புதுவை மாநில அரசு நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

தற்போது மத்திய அரசு வீடு கட்டுவதற்கு ரூ.1½ லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இந்த உதவியுடன் சேர்ந்து ரூ.3½ லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கு மாறாக, மத்திய அரசின் ரூ.1½ லட்சம் மானியத்துடன் ரூ.50 ஆயிரம் மட்டும் சேர்த்து, நாம் கொடுத்து வந்த ரூ.2 லட்சமே வழங்குகின்றனர். மக்கள் நலத்திட்டங்களை ஏன் நிறுத்திவிட்டீர்கள்? என்று கேட்டால் எதிர்க்கட்சிகள் தடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் உங்களிடத்தில் தான் உள்ளது. அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி தடுக்க முடியும்?

ராகுல்காந்தி பிரதமராக வந்தால் இலவச அரிசி, துணி வழங்குவதாக கூறுகின்றனர். ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? மத்திய அரசு ஏற்கனவே நிதி வழங்கிவிட்டது, நம் வருவாயும் தெரியும். அதை கொண்டு இலவச அரிசி, துணி வழங்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது தானே. கவர்னரிடம் பேசி கையெழுத்து வாங்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. கவர்னர் அலுவலகத்திற்கு சென்று உட்கார்ந்து பேசி வாங்கி வரவேண்டும்.

12 ஆண்டுகள் நான் முதல்–அமைச்சராக இருந்தபோது கவர்னரின் கையொப்பம் பெற்றுத்தான் திட்டங்களை நிறைவேற்றி வந்தேன். புதுவையில் அதிக அதிகாரம் கவர்னருக்கு தான். அவருடன் சண்டைபோட்டால் எப்படி கையெழுத்து கிடைக்கும்.

கருத்து கணிப்புப்படி மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, அதனால் புதுவைக்கு இவர்கள் எதுவும் செய்யப்போவதும் இல்லை. செய்ய முடியாதவர்கள் வீட்டிற்குப் போய்விடலாம். ஆட்சி மாற்றத்திற்கு ஜக்கு சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும். இளைஞரை நிறுத்திவிட்டார் என்று கூறுகின்றனர். 90 வயது நபரையா வேட்பாளராக நிறுத்த முடியும்? இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு அவ்வளவு சீக்கிரம் வீட்டில் அனுமதி தர மாட்டார்கள்.

நமது கூட்டணி பலமான கூட்டணி, மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். மத்தியில் அமையும் ஆட்சியுடன் ஒத்த நிலை இருந்தால் தான் புதுச்சேரிக்கு திட்டங்களும், நிதியும் கிடைக்கும். மேலும் நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு கிடைக்கும். எனவே அனைவரும் ஜக்கு சின்னத்தில் வாக்கு அளித்து என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story