ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது - ஆயக்குடியில், வைகோ பேச்சு


ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது - ஆயக்குடியில், வைகோ பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 10:00 PM GMT (Updated: 14 April 2019 8:31 PM GMT)

ராணுவவீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று ஆயக்குடியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

பழனி,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவாக பழனியை அடுத்த ஆயக்குடியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தீர்ப்பளிக்கும் நிலையில் உள்ள வாக்காளர் பெருமக்களே, உங்கள் தீர்ப்பு வெகுதூரம் இல்லை. உங்கள் தீர்ப்பானது தமிழகம், இந்திய தேசத்தையே வஞ்சிக்கிற கூட்டணியை அகற்றுவதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உள்ள விவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி, ரெயில்வே, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் ஆகியவற்றை விவசாயிகள், மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வரவேற்கிறார்கள். ஆனால் மோடி அரசுடன் சேர்ந்து தமிழக அரசு மன்னிக்க முடியாத தவறுகளை செய்து வருகிறது.

மக்களை காக்கிற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு ஓட்டு அரசியல் செய்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்து மதத்தையும் மதிக்கிறது, போற்றுகிறது. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்போம் என்கிறார்கள். இது அகிம்சைக்கு எதிரானது.

மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்தது. ஆனால் கஜா புயலில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித ஆறுதல் கூட சொல்ல முடியாதவர் தற்போது தமிழகத்துக்கு வர என்ன தகுதி இருக்கிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா என்ற மாணவி பலியானார். எனவே காங்கிரஸ்-தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி உரிமை அந்தந்த மாநிலத்துக்கே வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, தி.மு.க. கொறடா அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆயக்குடியில், திண்டுக்கல் சாலையில் வைகோ பேசிக்கொண்டிருந்தபோது, இருபக்கமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் நின்றவர்கள் ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தனர். இதனால் வைகோ பிரசாரத்தை சீக்கிரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதையடுத்து கன்னிவாடியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் தமிழகத்தில் மதசார்பற்ற நிலையை ஏற்படுத்தி, ரத்தக்களறிகளை தடுக்க தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

நிலக்கோட்டையில் வைகோ திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மதவெறி பிடித்த கட்சியையும், பாசிசக் கட்சியையும் இந்த நாட்டை விட்டு விரட்ட, ஜனநாயகம் காப்பாற்றப்பட நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். ராகுல்காந்தி மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ.72 ஆயிரம் நலிவுற்ற மக்களுக்கு கிடைப்பதற்கான திட்டத்தை வகுத்துள்ளார். தமிழ்நாட்டில் அடிமைகளாக இருப்பவர்களை விரட்டவும், மத்தியில் கூட்டாட்சியை ஏற்படுத்தவும் வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், நிலக்கோட்டை ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story