காங்கிரஸ் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடிந்ததும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எண்ணிப் பார்ப்பீர்கள் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு


காங்கிரஸ் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது; தேர்தல் முடிந்ததும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எண்ணிப் பார்ப்பீர்கள் - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 4:45 AM IST (Updated: 15 April 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சியை ரங்கசாமியால் எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பீர்கள் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் அப்போது அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் இந்த 3 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பல சோதனைகளை கடந்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இதில் இலவச அரிசி திட்டத்திற்காக ஆண்டிற்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் பினாமி கவர்னர் கிரண்பெடி மூலம் அதனை தடுத்து மக்களுக்கு நலத் திட்டங்களை செய்யவிடாமல் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் நமது ஆட்சியில் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடவும் தயாராக இருக்கிறோம். மேலும் இலவச அரிசியை தேர்தல் முடிந்து மறுநாள் வழங்க நீதிமன்றத்தை நாடி அதற்கான உத்தரவையும் பெற்றுள்ளோம்.

நமது ஆட்சி பதவியேற்றவுடன் இலவச அரிசியை தான் முதல் திட்டமாக கொடுத்தோம். இப்படி எந்த திட்டமாக இருந்தாலும் கவர்னர் மூலம் நிறுத்தும் மோடி ஆட்சிக்கும் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் நமது எதிர்க்கட்சித் தலைவருக்கும் உங்கள் வாக்குகளை போடுவீர்களா? இந்த ஒரு வாக்கு மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் ராகுல் காந்தி தலைமையிலான ஒரே ஆட்சி அமைய கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மாநிலத்திற்கு தேவையானதை நமது ஆட்சி கண்டிப்பாக நிறைவேற்றும்.

நாம் சேமித்த பணத்தை கொள்ளையடித்து அம்பானி, அதானி, நீரவ் மோடி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கி அதனை கட்டாமல் வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை நடத்த வழி செய்த பா.ஜ.க. மோடிக்கு இறுதி முடிவு கட்ட நாம் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். சாதாரண விவசாயிகள் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் எத்தனை கேள்வி? எத்தனை கெடுபிடிகள்?

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி 3 ஆண்டு காலமாக வாயை திறக்காமல் இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் மக்களிடம் அரிசி போட்டேன் என்று பேசுகிறார். இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்று தெரியாமல் சட்டமன்ற தேர்தல் என்று நினைத்து வாக்குறுதிகளை ரங்கசாமி அள்ளி வீசுகிறார்.

நானும் அமைச்சர் கந்தசாமியும் இருக்கும் வரை இந்த காங்கிரஸ் ஆட்சியை ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்தவுடன் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களித்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைவரும் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story