குன்னூர் ஏல மையத்தில், ரூ.9½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில், ரூ.9½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 14 April 2019 9:45 PM GMT (Updated: 14 April 2019 8:32 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.9½ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரியின் பொருளாதாரத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலை விவசாயத்தை நம்பி நீலகிரி முழுவதும் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். இது தவிர 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர்.

இந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் குன்னூரில் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 11, 12-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 11 லட்சத்து 42 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 62 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. இந்த ஏலத்தில் 9 லட்சத்து 59 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.9 கோடியே 59 லட்சம். இது 85 சதவீத விற்பனை ஆகும்.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.240, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.251 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.112 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.90 வரையும், உயர் வகை ரூ.116 முதல் ரூ.124 வரையும் ஏலம் போனது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.1 விலை வீழ்ச்சி இருந்தது.

வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 19-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. எனவே அந்த 2 நாட்கள் தேயிலை ஏலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 20-ந் தேதி ஒரே நாளில் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏலத்துக்கு மொத்தம் 11 லட்சத்து 96 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது.

Next Story