ஆத்தூரில் தமிழக அரசின் சாதனைகளை கூறி எல்.கே.சுதீஷ் ஓட்டு சேகரிப்பு


ஆத்தூரில் தமிழக அரசின் சாதனைகளை கூறி எல்.கே.சுதீஷ் ஓட்டு சேகரிப்பு
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 8:42 PM GMT)

ஆத்தூரில் தமிழக அரசின் சாதனைகளை கூறி கள்ளக்குறிச்சி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஓட்டு சேகரித்தார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆத்தூர் உழவர்சந்தை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள புனித ஜெய ராகினி அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களிடம் முரசு சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-தமிழக மக்கள் நலனில் அ.தி.மு.க. அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டம்-ஒழுங்கை தன் கட்டுக்குள் வைத்து பாதுகாத்து வருகிறார். இதன் மூலம் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஆத்தூர் நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிய திட்டத்தை அறிவித்து, அதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளார்.

ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய ரிங்ரோடு அமைப்பதாக முதல்-அமைச்சர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். பொங்கலுக்கு ரூ.1000 பரிசு வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். விவசாயிகளின் முதல்வனாக விளங்கி வருகிறார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ரூ.2 ஆயிரம் வழங்க உள்ளார். பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்தால், மாநிலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இன்னும் பல சாதனைகள் செய்ய வசதியாக இருக்கும். அதனால் தமிழக மக்கள் நலன் காத்திடவும், வளம் பெருகிடவும் வாய்ப்பாக அமையும். எனவே முரசு சின்னத்துக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்கு சேகரிப்பின் போது சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், த.மா.கா. மாவட்ட தலைவர் காளிமுத்து, தே.மு.தி.க. மாவட்ட மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத், ஆத்தூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளிசாமி, சிறுபான்மை பிரிவு மகபூப் பாஷா, தே.மு.தி.க. நகர செயலாளர் சீனிவாசன், தே.மு.தி.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுபா ரவி, அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் கலியன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story