‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


‘தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 10:14 PM GMT (Updated: 14 April 2019 10:14 PM GMT)

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தியாகதுருகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மாலை தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஊழல் கட்சி. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். எனவே கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீசுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் மத்திய மந்திரியாக சுதீஷ் இருந்து கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் தட்டுப்பாடு தீர்வுக்காக மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை முழு சீரமைப்பு செய்து தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவார். தியாகதுருகத்தை தாலுகாவாக மாற்ற முயற்சி செய்வார். தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பக்தர்களும் பொதுமக்களும் சிரமமின்றி சென்று வர புதிதாக மேம்பாலம் அமைத்து தர பாடுபடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தியாகதுருகம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஷியாம்சுந்தர், பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் நகர செயலாளர் ராஜி, ஒன்றிய அவைத்தலைவர் வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர் அய்யப்பா, தொண்டரணி நிர்வாகி சிறுவல் மணி, தே.மு.தி.க. மாநில தொழிற்சங்க துணைச்செயலாளர் சக்திவேல், மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் சிவலிங்கம், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ஜெய்சங்கர், பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பச்சையாபிள்ளை, குமரவேல், அ.தி.மு.க. நகர பாசறை பொருளாளர் ஏழுமலை மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த், விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி. நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

விழுப்புரத்தில் நமது கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணனின் வெற்றி உறுதியாகி விட்டது. எனவே விழுப்புரம் மக்கள் நல்லபடியாக சிந்தித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து சரித்திர வெற்றியை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

இந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், லட்சுமணன் எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், ராமதாஸ், முத்தமிழ்செல்வன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, மாநில விஜயகாந்த் மன்ற செயலாளர் ராஜசந்திரசேகர், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் தங்கஜோதி, சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல், மாநில துணைத்தலைவர்கள் ஹரிகரன், அன்புமணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் திருக்கோவிலூரில் விழுப்புரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனையும், மணலூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசையும் ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

Next Story