பொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


பொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2019 3:45 AM IST (Updated: 15 April 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனுக்கு, வாக்கு கேட்டு பொள்ளாச்சி நகர பகுதியில் நேற்று அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர். பொள்ளாச்சி குப்பாண்ட கவுண்டர் வீதியில் பிரசாரத்துக்கு வந்த வேட்பாளர் மகேந்திரனுக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2014-ம் ஆண்டு வேட்பாளராக மகேந்திரன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டு காலம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்த அவர் மீண்டும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். பொள்ளாச்சி-கோவை ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று விரிவாக்கம் செய்து உள்ளார்.

கொப்பரை தேங்காய் விலையை ரூ.54-ல் இருந்து ரூ.95-ஆக உயர்த்தி கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மகேந்திரன் எம்.பி. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வு மேம்படவும், பொள்ளாச்சி நகரத்துக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேட்பாளர் மகேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாட்சி தொடர 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து பொள்ளாச்சி நகர பகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று வேட்பாளர் மகேந்திரன் ஆதரவு திரட்டினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜேம்ஸ்ராஜா, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன், அ.தி.மு.க. நகர பொருளாளர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story