சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்த ரூ.11¼ லட்சம் போதைப்பொருள் லாரியுடன் பறிமுதல் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு


சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்த ரூ.11¼ லட்சம் போதைப்பொருள் லாரியுடன் பறிமுதல் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 2:27 PM GMT)

பள்ளிகொண்டாவில் சாக்கு மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.11¼ லட்சம் மதிப்புடைய ‘மாவா’ எனும் போதைப்பொருள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர், 

வேலூர் மாவட்ட போதைப்பொருள் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாவுக்கு பள்ளிகொண்டா அருகே வாகனங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் பல பிளாஸ்டிக் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அப்புறப்படுத்தி போலீசார் சோதனை செய்தபோது 90 சாக்கு மூட்டைகள் இருந்தன. சந்தேகமடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதற்குள் ‘குட்கா’ போன்ற போதை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருளான ‘மாவா’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் மொத்த எடை 2 டன் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.11 லட்சத்து 25 ஆயிரம். இதையடுத்து லாரியுடன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. அவர் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு லாரியில் போதைப்பொருளை கடத்திச் செல்வதாக போலீசாரிடம் கூறினார். அதைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே போலீசார் லாரியையும் அதில் இருந்த போதை பொருட்களையும் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவனிடம் ஒப்படைத்தனர்.

அவர் அந்த பொருளின் மாதிரியை சேலத்தில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story