வாணியம்பாடி பகுதியில் அ.தி.மு.க.பிரமுகரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
வாணியம்பாடி அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் அ.தி.மு.க.பிரமுகரிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ராணிப்பேட்டை என்ற இடத்தில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பறக்கும்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அ.தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவர் கைப்பையில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 900–ஐ பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மரிமாணிகுப்பம் என்ற இடத்தில் கோபி என்பவரிடம் ரூ.13 ஆயிரத்தையும், மேகநாதன் என்பவரிடம் ரூ.15 ஆயிரத்தையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்காக வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்தது.
பேரணாம்பட்டில் தேர்தல் நிலைகண்காணிப்பு குழுவினர், அலுவலர் லோகபிரியன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குடியாத்தம் அரசு மருத்துவமனை ரோட்டை சேர்ந்த முகிலன் (வயது 45) என்பவரிடம் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 இருந்தது. விசாரணையில் நோட்டீஸ் அச்சடித்து கொடுத்து விட்டு பணத்தை பெற்று செல்வதாக தெரிவித்தார். ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து தாசில்தார் செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.