தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு


தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 April 2019 4:45 AM IST (Updated: 15 April 2019 9:15 PM IST)
t-max-icont-min-icon

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து நடிகர் உதயநிதிஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வால் மாணவர்களும், ஜி.எஸ்.டி.யால் பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில் பா.ஜ.க., தமிழகத்தில் அ.தி.மு.க அரசுகளால் பொதுமக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்.

தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகை கடன்கள் ரத்து செய்யப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றவில்லை.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் ஜெகத்ரட்சகன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் பிரபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story