அமைதியான முறையில் தேர்தல் நடக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. வனிதா பேட்டி


அமைதியான முறையில் தேர்தல் நடக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.ஐ.ஜி. வனிதா பேட்டி
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 4:40 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் டி.ஐ.ஜி.வனிதா தெரிவித்தார்.

வேலூர், 

இது தொடர்பாக அண்ணாசாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 456 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 347 வாக்கு சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும், ரெண்டாடி, மூஞ்சூர்பட்டு ஆகிய 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் வாக்குப்பதிவின்போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாமலும், மக்கள் எவ்வித பயமுமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் 2 ஆயிரத்து 871 பேர், 10 கம்பெனி துணை ராணுவத்தினர் 800 பேர், 4 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், பயிற்சி காவலர் 196 பேர், முன்னாள் ராணுவத்தினர் 1,500 பேர், ஊர்க்காவல் படையினர் 400 பேர், ஓய்வு பெற்ற தீயணைப்பு துறையினர் 50 பேர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் 50 பேர், நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை சேர்ந்த 500 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இத்துடன் 317 நடமாடும் காவல் குழுவை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு அடிக்கடி சென்று கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். வாக்குப்பதிவின்போது ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என உயர் அதிகாரிகள் பொறுப்பில் 72 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என 362 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களை வகைப்படுத்தி அதில் 300 பேரை உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தி 6 மாத காலம் அமைதி காப்பதற்கான நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் 29 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக விதிமீறிய 72 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாராவது பொதுமக்களை மிரட்டியோ அல்லது தனிப்பட்ட நபருக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் குறித்தும் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் தகவல் அளிக்க விரும்பினால் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0416- 2258898 என்ற தொலைபேசி எண்ணிலும், 9360276882 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணிலும், 9498111101 என்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவின் செல்போன் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

வேலூர் மாவட்டத்தில் 65 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவத்தினர் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியாற்றிட முன்வரவேண்டும். தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கான ஊதியம் உடனடியாக வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் அனைத்து பணிகளையும் உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல்துறையானது வி.ஐ.டி.யுடன் இணைந்து போலீசாருக்கான புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story