8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய மந்திரிகள் பேச்சுக்கு எதிர்ப்பு: கால்நடைகளுடன், விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் சேலம் அருகே பரபரப்பு


8 வழிச்சாலை திட்டம் குறித்து மத்திய மந்திரிகள் பேச்சுக்கு எதிர்ப்பு: கால்நடைகளுடன், விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் சேலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 4:48 PM GMT)

8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறிய மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அருகே விவசாயிகள், கால்நடைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்காரி, 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசினார்.

இதேபோல் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தார். மத்திய மந்திரிகளின் பேச்சு, இந்த திட்டத்தால் விவசாய நிலங்களை இழந்து பாதிக்கப்பட உள்ள சேலம் பகுதி விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தில் விவசாயிகள் நேற்று கருப்புக்கொடிகளை ஏந்தி, கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இந்த திட்டத்திற்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பேசி உள்ளதாகவும் அவர்களை கண்டித்தும், இந்த கருத்துக்கு எதிராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என்று கூறி அவரை கண்டித்தும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு எதிராக பேசி உள்ளதுடன், இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாகவும் மீண்டும் கூறியுள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என கூறி உள்ளதால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குப்பனூர் நாராயணன் தலைமை தாங்கினார். இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பெண்களும், கறவை மாடுகளுடன் பங்கேற்றனர். சிலர் கருப்புக்கொடிகளையும் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் மத்திய மந்திரிகளின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அருகே உள்ள பூலாவரி, புன்செய்காடு, ஆத்துக்காடு, சூளமேடு ஆகிய பகுதிகளில் , 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கருப்புக்கொடிகளை நட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் தங்கள் விளைநிலங்கள் வழியாக கருப்புக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

இந்த போராட்டம் குறித்து அவர்கள் கூறும் போது, மத்திய மந்திரிகளின் பேச்சு விவசாயிகளிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய மந்திரியின் பேச்சுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு எதுவும் தெரிவிக்காதது அவர் மீதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும். இனி மத்திய மந்திரி நிதின் கட்காரி தமிழகத்திற்கு வரும் போது கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்‘ என்றார்கள்.

இந்த போராட்டங்கள் ராமலிங்கபுரம், பூலாவரி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story