நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 16 April 2019 4:00 AM IST (Updated: 15 April 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக போலீசார் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினார்கள்.

அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு அணி வகுப்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு பொங்களூரு சாலை வழியாக ரவுண்டானா வரை சென்று மீண்டும் அண்ணா சிலையை அடைந்தது. இதில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், சிறப்பு பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி நகர போலீசார் என மொத்தம் 220 பேர் கலந்து கொண்டனர்.

காவேரிப்பட்டணத்தில் போலீசார் சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இந்த ஊர்வலம் பனகல் தெரு, கொசமேடு, அம்பேத்கர் தெரு, பாலக்கோடு கூட்ரோடு மற்றும் பஸ் நிலையம் வழியாக சென்று போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

ஓசூரில், தேர்தல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பாகலூர் ஹட்கோ பகுதியில் முடிவடைந்தது.

இதில், ஆண், பெண் போலீசார், டிராபிக் போலீசார் மற்றும் ஊர்க்காவல்படை வீரர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story