குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை தெருக்களில் புதிதாக 1,200 குடிநீர் தொட்டிகள் அமைப்பு


குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை தெருக்களில் புதிதாக 1,200 குடிநீர் தொட்டிகள் அமைப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 5:08 PM GMT)

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாநகரில் உள்ள தெருக்களில் கூடுதலாக 1,200 புதிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

சென்னையில் விசுவரூபம் எடுக்கும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாநகரில் உள்ள தெருக்களில் கூடுதலாக 1,200 புதிய தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 10 ஆயிரத்து 649 தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையிலும் வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயிலினால் சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன.

பூண்டி ஏரியில் வெறும் 268 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் இருந்து தினசரி 60 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுதவிர புழல் ஏரியில் 219 மில்லியன் கன அடியில் 85 கன அடி தண்ணீர் தினசரி குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் சேர்த்து 520 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் ஆவியாவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீரின் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் தெருக்குழாய்கள் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதுடன், பொதுவான இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கும் தினசரி 2 முறை லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது.

இதில் ஒரு சில இடங்களில் தண்ணீர் முறையாக கொண்டு சென்று நிரப்புவதில்லை, தினசரி 2 முறைக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் கொண்டு வருவது இதுபோன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகரப்பகுதிகளில் தண்ணீர் குறைவாக வரும் பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், தெருக்குழாய்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு தினசரி 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரத்து 649 குடிநீர் தொட்டிகள் (சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள்) தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளையிலும் இந்த தொட்டிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 1,200 குடிநீர் தொட்டிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றிலும் தினசரி 2 முறை தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சராசரியாக இந்த தண்ணீர் தொட்டிகள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும்.

இதுதவிர 64 தண்ணீர் தொட்டிகள் டேங்கர் லாரிகளில் பொறுத்தப்பட்டு தண்ணீர் தேவைப்படும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் பிறமாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் பெரிய அளவு குடிநீர் பிரச்சினை ஏற்படவில்லை. முடிந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தண்ணீர் கேட்கும் பகுதிகளுக்கு எல்லாம் லாரிகளில் கொண்டு சென்று வினியோகம் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. போதுமான அளவு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும் பழகி கொள்ள வேண்டும். அதையும் மீறி தண்ணீர் கிடைக்காத பொதுமக்கள் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலகம் புகார் பிரிவு 044-2845 4040 மற்றும் 044-4567 4567 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேற்கண்ட தகவல்களை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story