வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு ஒருவரை அழைத்து செல்லலாம் கலெக்டர் தகவல்


வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு ஒருவரை அழைத்து செல்லலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 7:38 PM GMT)

வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு ஒருவரை அழைத்து செல்லலாம் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து சிறப்பு ஒருங்கிணைப்புக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அனைவருக்குமான தேர்தலாக, அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்திடும் தேர்தலாக அமையும் வகையில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,287 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சக்கர நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஊராட்சிகளில் 300 சக்கர நாற்காலிகளும், பேரூராட்சிகளில் 220 சக்கர நாற்காலிகளும், நகராட்சிகளில் தலா 20 சக்கர நாற்காலிகளும், மாநகராட்சியில் 25 சக்கர நாற்காலிகளும் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்ய செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் வாக்களிக்க ஏதுவாக எந்திரம் வைக்கப்பட்டுள்ள மேஜையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகள் உதவிக்கு ஒருவரை அழைத்து செல்லலாம்.

இவ்வாறுஅவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ரவீந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story