நெல்லையில் 2-வது கட்டமாக போலீசார் தபால் ஓட்டு போட்டனர்


நெல்லையில் 2-வது கட்டமாக போலீசார் தபால் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 7:52 PM GMT)

நெல்லையில் 2-வது கட்டமாக போலீசார் நேற்று நீண்ட வரிசையில் நின்று தபால் ஓட்டு போட்டனர்.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில் ஈடுபடும் போலீசார் நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட முடியாது. எனவே அவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுகிறது.

நெல்லை மாநகர பகுதியில் பணியாற்றும் போலீசார் கடந்த 13-ந் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டனர். நெல்லை மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியிலும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திலும் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

2-வது கட்டமாக போலீசார் நேற்று தபால் ஓட்டு போட்டனர். காலை 9 மணி முதல் போலீசார் வரிசையில் நின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். அங்குள்ள ஓட்டுப்பெட்டியில் தபால் வாக்குகளை போட்டனர்.

ஜான்ஸ் பள்ளிக்கூடத்தில் 1,780 போலீசாரும், 300 ஊர்க்காவல் படையினரும், 100 முன்னாள் ராணுவ வீரர்களும் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் நின்று போலீசார் ஓட்டு போட்டனர். மாலை வரை ஓட்டு பதிவு நடந்தது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Next Story