மராட்டியத்தில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு


மராட்டியத்தில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 15 April 2019 11:30 PM GMT (Updated: 15 April 2019 7:52 PM GMT)

மராட்டியத்தில் 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது.


முதல் கட்டமாக 91 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் மராட்டியத்தின் வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளும் அடங்கும்.

இந்தநிலையில் 2-வது கட்ட தேர்தல் வருகிற 18-ந் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இதில் மராட்டியத்தின் 10 தொகுதிகளுக்கும் அன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இந்த 10 தொகுதிகளில் மொத்தம் 179 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நாந்தெட் தொகுதியில் போட்டியிடுகிறார். மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளும், எம்.பி.யுமான பிரீத்தம் முண்டே பீட் தொகுதியில் களம் இறங்குகிறார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பா.ஜனதா வேட்பாளர் சித்தேஷ்வர் சிவாச்சார்யா மகாசுவாமிஜி ஆகியோர் சோலாப்பூரில் போட்டியிடுகின்றனர்.

மேற்கண்ட 10 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் சுழன்று சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

இதற்கிடையே 10 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மராட்டியத்தில் 3-ம் கட்டமாக 23-ந் தேதி 14 தொகுதிகளிலும்,4-ம் கட்டமாக 29-ந் தேதி மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.


இதேபோல தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டி களத்தில் பிரகாசிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும் (ஆண்கள் 781, பெண்கள் 63, திருநங்கை 1), சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்களும் (ஆண்கள் 242, பெண்கள் 27) போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. தமிழகத்தில் இன்று தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய உள்ளனர்.

Next Story